ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் நடுரோட்டில் ரம்மி விளையாடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இணையதளம் வாயிலாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. ரம்மி விளையாட்டுகளில் பணங்களைக் கட்டி விளையாடுவது மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் அதனால் பல்வேறு இளைஞர்கள் பெரும் பண இழப்பைச் சந்தித்து வருகின்றனர். பலரும் அதிக அளவிலான பணங்களை ரம்மி விளையாட்டுகள் மூலம் இழந்து வரும் நிலையில் பல்வேறு குடும்பங்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருவதாகவும், சமூகத்தில் சீரழிவை ஏற்படுத்தும் இதுபோன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரம்மி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், ரம்மி விளையாடி சீட்டுகளை மீண்டும் கிழித்தெறிந்து தங்களது எதிர்வினையைப் பதிவு செய்தனர். அத்துடன் ரம்மி விளையாட்டுகளுக்கு ஆதரவாக இணையதளங்களின் விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எதிர்கால சந்ததியினர் இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும், நேரத்தையும் சீரழிக்கும் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை உடனடியாக அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-ம.பவித்ரா








