மக்களுக்கு இடையூறு – இதுவரை 64 பேர் மீது குண்டர் சட்டம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்…

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி, குற்றசம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர். அந்த வரிசையில் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பதியப்பட்ட வழக்குகள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

87 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45.775 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 31 பேர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூறப்படும் 35 பேர் மீது நன்னடத்தைப் பிணையம் வாங்கபட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அவர்களிடமிருந்து 75.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் 1,95,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 28 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.