சீன ஸ்மாா்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவில் ரூ.9,000 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் நேற்று எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2018-19 முதல் 2022-23-ஆம் ஆண்டு வரையில், ஓப்போ, விவோ, ஷாவ்மி உள்ளிட்ட சீன நிறுவனங்கள் ரூ.9,000 கோடி அளவில் சுங்க வரி மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களிடம் இருந்து இதுவரை ரூ.1,629.87 கோடி மீட்கப்பட்டுள்ளது.
ஓப்போ நிறுவனம் ரூ.5,086 கோடி அளவிலும் (சுங்க வரி ரூ.4,403 கோடி, ஜிஎஸ்டி ரூ.683 கோடி), விவோ நிறுவனம் ரூ.2,923 கோடி அளவிலும் (சுங்க வரி ரூ.2,875 கோடி, ஜிஎஸ்டி 48 கோடி), ஷாவ்மி ரூ.851 கோடி (சுங்க வரி 682 கோடி, ஜிஎஸ்டி ரூ.168 கோடி) வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








