சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக, நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அர்ணவ் மனு தாக்கல் செய்தார். அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு என்றும், அவர் தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்திரசேகரன், அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி சந்திரசேகரன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா