நீலகிரி மலைப்பகுதியில் ஜாலியாக பைக் ரைடிங் செய்தவர்களைச் சோதனை செய்யக் காத்திருந்த கரடிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய கரடிகளை ‘Sloth Bear’ எனும் பொது பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த வகை கரடிகள் காடுகளை விட்டு எளிதில் வெளியே தென்படாதவை. சுலபமாகப் பார்க்கமுடியாத வன விலங்குகளில் கரடியும் ஒன்றாகும்.
இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில், நீலகிரி மலைப்பகுதியில் பைக் ரைடிங்கில் ஈடுபட்ட குழுவினர் தங்களுடைய பயணத்தை வீடியோவாக பதிவுச் செய்துகொண்டே பைக் ரைடிங் செய்துள்ளனர். இருபுறம் பசுமையாகக் காட்சியளிக்க அழகான வளைவுகளில் இருசக்கர வாகனம் சென்றுகொண்டிருக்கிறது.
அப்போது திடீரென சிறு தொலைவில் கரடி ஒன்று நின்றுகொண்டிருப்பதை வாகன ஓட்டி தன்னுடைய கேமராவில் பதிவு செய்கிறார். முதலில் இரண்டு கரடிகள் மட்டும் தென்படும் நிலையில் சற்று அருகே செல்லும் வாகன ஓட்டியின் கேமராவில் ஒரு தாய் மற்றும் இரண்டு குட்டிகள் என ஒரு கரடி குடும்பமே காட்சியளிக்கிறது. அருகில் நெருங்கும் நபரை எச்சரிக்கும் கரடி ஒரு கட்டத்தில் வீடியோ எடுப்பவரை தூரத்திக்கொண்டுவருகிறது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள இந்த வீடியோவை தற்போதுவரை 1.2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 4 ஆயிரத்து 200 பேர் லைக் செய்துள்ளனர்.
இந்நிலையில் அகமது சயீத் என்பவர் பதிவிட்ட மற்றொரு ட்விட்டர் வீடியோவில், கரடிகளை வீடியோ எடுத்தவர் பாதுகாப்பாக வீடு திரும்பிவிட்டார் எனவும் ஆனால் கரடிகள் அதே இடத்தில் முகாமிட்டுள்ளதாகப் பதிவுச் செய்துள்ளார்.







