பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகளை விசாரிக்க ஒட்டபட்ட சம்மனை மீறி அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி டி.ஜி.பி. திரிபாதி உத்தவிட்டார். இந்நிலையில், சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் டேராடூன் விரைந்தனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவிற்கு ஆதரவாக செயல்பட்ட 5 ஆசிரியைகள் சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்ட சம்மனை பெறாமல் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள இவர்களது இல்லங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.







