நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் மூன்று வயது சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மிக குறுகிய காலத்திலே சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இவர் ரஜினி முருகன், வேலைக்காரன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை கவர்ந்துள்ளார்.
இவர் தற்போது ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கி வரும் ‘மாவீரன்’படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துவிட்டு, தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்திற்கு தயாராகி வருகிறார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள வண்டலூர் விலங்கியல் பூங்காவில் அனு என்ற புலியைத் தத்தெடுத்தார். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு, அதே விலங்கியல் பூங்காவில் மீண்டும் ஒரு வெள்ளைப் புலியை தத்தெடுத்தார்.
இந்நிலையில், அவர் தற்போது ஒரு சிங்கத்தை தத்தெடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஷேரூ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை சிவகார்த்திகேயன் அடுத்த ஆறு மாதத்திற்குத் தத்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இச்சிங்கத்திற்கான உணவு மற்றும் மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார். சிங்கத்தை ஆறு மாதங்களுக்கு பராமரிக்க சுமார் ரூ.75,000 செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.







