டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சிபிஐ அதிகாரிகளால் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, சிசோடியாவின் சி.பி.ஐ. காவல் 2-வது முறையாக 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து வரும் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மதுபானக்கொள்கை ஊழலில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பிறகு மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 7 நாட்கள் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவரை மேலும் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அண்மைச் செய்தி: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு – மார்ச் 26ம் தேதி வாக்குப்பதிவு
அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவை மேலும் 5 நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. மணீஷ் சிசோடியாவிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து மேலும் 5 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.