திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் காட்டுத்தீப் பரவி பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் கருகின. தீயினை அணைக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் ஏறத்தாள பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இங்கு மான்கள், காட்டெருமைகள், கேளையாடுகள், காட்டுப்பன்றி ,சருகு மான்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் உள்ளிட்ட அரிய வகை
உயிரினங்கள் வசித்து வருகிறன. இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக சுற்றுலா செல்லும் சிலர் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதன் காரணமாக அடிக்கடி கோடைகாலங்களில் தீப்பிடித்து வனப்பகுதிகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறன.
இன்று சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியில் இருந்து தென்மலை செல்லும் வழியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்தத் தீ காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக படிப்படியாக வனப்பகுதியில் பரவ துவங்கி, இன்று மதியம் வரை ஏறத்தாழ 3 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் பரவியுள்ளது. இதனால், அப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் கருகியதோடு, அப்பகுதியிள் வசித்து வந்த பல உயிரினங்கள் வேறு பகுதிக்கு இடம் மாறி உள்ளன.காட்டுத்தீப் பரவி பல மணி நேரங்கள் ஆகியும் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் யாரும் தீயினைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை.
சிறுமலை பகுதிக்கு செல்லும் வாகனங்களைச் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர் அனுமதித்து வந்த நிலையிலும், இதுபோன்ற தீ விபத்துகள் சில சமூக விரோத கும்பல்களால் நடந்து வருவது சிறுமலை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இக்காட்டுத் தீயை உடனடியாக கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரும் காலங்களில் இது போன்ற தீ விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கக் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும்,கூடுதல் ரோந்து பணிகளில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும், மேலும் சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
-சௌம்யா.மோ







