“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!

“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்..” என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக…

“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்..” என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு அரசு துறைகள் இங்கே செயல்பட்டு வரக்கூடிய நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் தூய்மைப்பணியாளரின் இருசக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில் ஒரு வாரம் கழித்து அது கொடுமுடியில் மீட்கப்பட்டது. எனவே, இங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் ஒன்றில், “ஐயா… மாற்றுத்திறனாளி வாகனம்… திருடி விடாதீர்கள்…” என நம்பர் பிளேட்டில் எழுதி வைத்துள்ள வாசகம் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அருகாமையிலேயே மாவட்ட தகவல் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தில் இதுபோன்று எழுதப்பட்டுள்ள சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.