கட்சி உடையக்கூடாது, இபிஎஸ்ஸுடன் பேசத் தயார்; ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று…

அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “இரட்டைத் தலைமை நன்றாக சென்றுகொண்டிருந்த வேளையில் ஒற்றைத் தலைமை விவாதம் ஏன் எழுந்தது எனத் தெரியவில்லை. சிறப்பு அழைப்பாளர்கள் பொது குழுவில் ஏன் பங்கேற்க கூடாது என்பது குறித்து விளக்கவே, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
ஆனால், கூட்டம் முடியும் போது ஒருங்கிணைப்பாளரான என்னிடம் கலந்து பேசாமல், மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் ஒற்றை தலைமை குறித்து பேச தொடங்கினார்கள்.

கூட்டத்தில் பேசியதை ஜெயக்குமார் வெளியே தெரிவித்ததால் தான் ஒற்றை தலைமை சர்ச்சை பூதாகரமானது. எதிர்க்கட்சியாக இருக்கின்ற வேலையில் இது தேவையற்ற ஒன்று, இரட்டை தலைமை நன்றாக சென்று கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “நானோ, எடப்பாடி பழனிச்சாமியோ ஒற்றைத் தலைமை குறித்து பேசியதில்லை. எந்த அதிகாரத்திற்கும் நான் ஆசைப்பட்டவனில்லை. அதிமுக தொண்டர்களிடமிருந்து என்னை ஒருபோதும் ஓரங்கட்டிவிட முடியாது, அதிமுக பிளவுபடக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. கட்சி இரண்டாக உடையக் கூடாது. எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயாராக இருக்கிறேன். எனது கருத்தை கூறிவிட்டேன். எடப்பாடி பழனிசாமி தனது கருத்தைக் கூற வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரம் சுமூகமாக முடிய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.