சட்டவிரோதமாக ரயில் டிக்கெட் விற்பனை – பொறியாளரை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்

சென்னை அருகே சாப்ட்வேரை பயன்படுத்தி சட்டவிரோதமாக தட்கல் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த பொறியாளரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.   ரயில்வே துறையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக தனிநபர்கள்…

சென்னை அருகே சாப்ட்வேரை பயன்படுத்தி சட்டவிரோதமாக தட்கல் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த பொறியாளரை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 

ரயில்வே துறையில் டிக்கெட் விற்பனை தொடர்பாக தனிநபர்கள் சிலர் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர். அவர்களை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிய சாப்ட்வேர் பயன்படுத்தி சட்டவிரோதமாக தட்கலில் ரயில் டிக்கெட் எடுத்து விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை பல்லாவரம் அருகே சோழவரத்தில் தனி நபர் ஒருவர் ரயில் டிக்கெட்டுகளை தட்கள் மூலம் எடுத்து கொடுப்பதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ரயில்வே காவல்துறை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீ செந்தில் குமரேசன் உத்தரவின் பேரில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர்.

 

அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அகிலேஷ் குமார் என்பவரை சுற்றி வளைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஒரு மென்பொருள் பொறியாளர் என்பது தெரியவந்தது. அவர் புதிதாக சாப்டுவேர் கண்டுபிடித்து அதன் மூலமாக சட்டவிரோதமாக தட்கல் மூலம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அகிலேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 98 தட்கல் டிக்கெட்டுகள் மற்றும் டிக்கெட் எடுத்து கொடுப்பதற்கு பயன்படுத்தி வந்த கணினி மற்றும் அதன் தொடர்பான கருவிகளையும் பறிமுதல் செய்தனர். எதிர்வரும் காலங்களில் ரயில்வே துறைக்கு எதிரான சட்டவிரோத செயல்கள் குறித்து சோதனை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும், சாப்ட்வேரை பயன்படுத்தி ரயில் டிக்கெட்டில் மோசடி செய்தது இதுதான் முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.