கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவிய நிலையில், அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
இந்திய திரையுலகில் கர்நாடக இசைப் பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். வசீகரா, உனக்குள் நானே, யாரோ மனதிலே, முதல் கனவே, ஒன்றா ரெண்டா ஆசைகள் என தமிழில் பல ஹிட் பாடல்களை தந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பக்திப் பாடல்களும் பாடியுள்ள இவர், பல்வேறு இசைக் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். அந்த வகையில், இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றுள்ளார். ஓட்டலில் தங்கி இருந்த அவர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
இதையடுத்து பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், கோமா நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மெட்ராஸ் மியூசிக் அகாடமி விளக்கமளித்துள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர் சார்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இசை நிகழ்ச்சிக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும்போது பாம்பே ஜெயஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில், உங்களின் ஆதரவை பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம் கோருகிறது. சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை புறக்கணிக்க அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.