தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அதனது பதிலுறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “
பெண்களை தொழில் முனைவோராக்க புதிதாக சிங்கப்பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடி மதிப்பீட்டில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, லாபத்தை உயர்த்த வெற்றி என்ற பொதுவான வணிகச் சின்னம் (லோகோ) அறிமுகப்படுத்தப்படும்.
ரூ.20 லட்சத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தரம் உயர்வு
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் குறைந்தபட்சம் ஐந்து சேவைகளை வழங்கும் மையங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக ஒவ்வொரு சங்கத்திற்கும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் போட்டித் திறனை மேம்படுத்த முதன்முறையாக மாநில கூட்டுறவுக் கொள்கை (State Cooperative Policy) உருவாக்கப்படும். வலுவான நிர்வாகம், உறுப்பினர் நலன் மற்றும் தொழில்முறை மேலாண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இக்கூட்டுறவு அமைப்புகள் தன்னிறைவு பெற்ற பொருளாதார நிறுவனங்களாக மாற்றப்படும்.
தமிழக கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரிக்க “வெற்றி” என்ற பொதுவான வணிகச் சின்னம் (Logo) அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கூட்டுறவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு விரிவடைவதுடன், விவசாயிகளின் வருவாயும் கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.
ஊரகப் பகுதிகளில் உள்ள குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் நோக்கில், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக 9 சதவீத வட்டி விகிதத்தில், ரூ.5,000 கோடி மதிப்பில் ஊரகத் தொழில் கடன் (Rural Business Loan) வழங்கப்படவுள்ளது.
புதிதாக 150 ரேஷன் கடை பணியாளர் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் 82 கூட்டுறவு நிறுவனங்களில் நிறுவப்படும். கூட்டுறவு கடன் அமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் குறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்யப்படும். வேளாண் விளைபொருள் ஈட்டுக் கடன் ரூ.115 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக அதிகரித்து வழங்கப்படும்.” இன்று அவர் கூறினார்.




