உலக பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-ஆவது இடத்திலிருந்து 80-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
எந்த நாட்டின் குடிமகன்கள் முன்னமே விசா பெறாமல் அதிக நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
இப்படி, அண்மையில் ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜப்பான் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்போர் விசா முன்னறே எடுக்காமல் 192 நாடுகளுக்கு செல்லலாம். அங்கு சென்று உரிய அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதன் வாயிலாக உலகின் வலிமையான பாஸ்போர்ட் -ஆக சிங்கப்பூர் பாஸ்போர்ட் சிறப்பிடம் பெற்றுள்ளது. அதோடு சிங்கப்பூர் கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 23,100 பேருக்கு குடியுரிமை வழங்கியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இடத்தில் இருந்த அமெரிக்க பாஸ்போர்ட் தற்போது 8-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள சிங்கப்பூரை தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. இந்த நாட்டின் பாஸ்போர்ட்களை கொண்டோர் கடுமையான விசா நடைமுறைகள் இல்லாமல் 190 இடங்களுக்கு நுழைவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர்.
எளிய விசா நடைமுறைகளுடன் 27 நாடுகளுக்கு மட்டுமே செல்ல ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் கொண்டோர் அனுமதிக்கப்படுவதால், அந்நாட்டு பாஸ்போர்ட் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் கடந்த ஆண்டை விட மூன்று இடங்கள் முன்னேறி உலகின் 12-வது சக்திவாய்ந்த பாஸ்போர்டை கொண்டுள்ளது. எமிரேட் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது 179 நாடுகளுக்கு எளிய விசா நடைமுறைகளுடன் செல்லலாம்.
இந்த தரவரிசை பட்டியலில் ஏற்கனவே 87-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 7 இடங்கள் முன்னேரி 80-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 57 நாடுகளுக்கு செல்லலாம். அந்நாட்டிற்கு சென்று அங்கு உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் விசா இல்லாமல் நேரடியாக சென்று அங்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்கான வசதி நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







