அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்திருக்கும் சூழலில் சட்டரீதியாக அதற்கான சாத்தியம் இல்லை என மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றைத்தலைமைக்கான குரலும் வலுவாக எழுந்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் கருத்தும் ஒற்றைத்தலைமை வரவேண்டும் என்பதாகவே இருந்தது.
அதிமுகவின் பொதுசெயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமைகளாக கட்சியை வழிநடத்த தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அவருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவருக்கும் வழங்கும் வகையில் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும் இவர்கள் இருவருக்குமான உட்கட்சி பூசல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கான விளைவுகள் தான் தொடர் தோல்விகள் என கூறப்படுகிறது. காலச்சூழலுக்கு ஏற்ப அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை தேவை என கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அதிமுக ஒற்றை தலைமையை நோக்கி பயணிப்பது அவ்வளவு எளிதல்ல என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்ததோடு, தேர்தல் ஆணையத்திடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஒற்றைத் தலைமையை நோக்கி பயணிக்க வேண்டுமென்றால் அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதாவது 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவியை ரத்து செய்து சட்ட திருத்தம் மேற்கொள்வதோடு அதற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்தில் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் கட்சியின் பெயரும் சின்னமும் ஓ.பன்னீர்செல்வம் அணியிடம் இருப்பதால் ஒற்றைத்தலைமை என்பது தற்போதய காலத்தில் சாத்தியமில்லை என்பதும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இது ஒருபுறமிருக்க அதிமுகவை வழிநடத்த ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆகிய இருவமே சரியான தலைவர்கள் அல்ல எனவும் அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கும் ஒற்றைத்தலைமையே வேறு என்கின்றனர் சிலர். அதிமுகவில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் இணைந்து ஒருமித்த ஆதரவாக செயல்பட வேண்டும் எனவும் அப்போது தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரே சிறந்த ஒற்றைத்தலைமையாக செயல்பட முடியும் என மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவின் சட்டவிதிகளின் படியும், சின்னம், கொடி ஆகியவற்றின் உரிமம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருப்பதாலும் தற்போதைக்கு ஒற்றைத் தலைமை என்பது சாத்தியப்பட போவதில்லை எனவும் அவ்வாறு ஒற்றைத்தலைமை வரும்பட்சத்தில் அது அதிமுகவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..
– விக்னேஷ்








