கண்ணழகுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று அவரது வாழ்க்கைப் பயணத்தை குறித்து விரிவாகக் காணலாம்.
சில்க் ஸ்மிதா என்றால் கண்ணழகும், கவர்ச்சியும், வனப்பான உடல் அழகுமே நினைவுக்கு வரும். ஆனால் அந்த நாயகி வாழ்க்கையில் உள்ள கறுப்பு பக்கங்கள் நம் கண்களுக்கு அவ்வளவாக தெரிவதில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா. தமிழை பூர்வீகமாக கொண்ட அவரது இயற்பெயர் விஜயலெட்சுமி. இறக்கும் போது பெயரோடும், புகழோடும் மறைந்து போன சில்க் ஸ்மிதாவின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானதல்ல.
வறுமையின் தாக்கத்தால் 4ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை முடித்த விஜயலெட்சுமிக்கு, சினிமா மீதான ஆர்வம் மட்டும் குறைந்தபாடில்லை. 1980களில் வினு சக்கரவர்த்தியின் உதவியால் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் விஜயலெட்சுமிக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் விஜயலெட்சுமியின் பெயர் சில்க். கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்தார் விஜயலெட்சுமி.
ஸ்மிதா என பெயரை மாற்றிக் கொண்டாலும், முதல் படத்தில் கிடைத்த சில்க் என்ற பெயர் அவரோடு ஒட்டிக் கொண்டது. ஒரு கவர்ச்சி நடிகையை ஒட்டு மொத்த திரை ரசிகர்களும் கொண்டாடினார்கள் என்றால் அது நிச்சயமாக சில்க் ஸ்மிதாவாக மட்டுமே இருக்க முடியும். காரணம் அவரது விழி மொழி, உடல் மொழி என ஆயிரம் காரணங்களை கூறி கொண்டே செல்லலாம். திரையரங்குகளில் கதாநாயகர்களை தாண்டி, சில்க் ஸ்மிதாவிற்காக கோஷம் எழுப்பினார்கள் என்றால், எந்த அளவிற்கு ரசிகர்களை கட்டி போட்டிருந்தார் என்பதை உணர முடியும்.
சில்க் ஸ்மிதாவின் நடிப்புத் திறமைக்காக எத்தனையோ படங்களை அடுக்கி கொண்டே சென்றாலும், அலைகள் ஓய்வதில்லை, அன்று பெய்த மழையில் போன்ற படங்கள் சிலக் ஸ்மிதா என்ற நடிகையின் மறுபக்கத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்கள். பல நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என ஆணித்தரமாக நிரூபித்தார் சில்க் ஸ்மிதா.
லட்சங்களில் சம்பளம் பெற்றாலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் ஒரு வித வெறுமை அவரை துரத்திக் கொண்டே இருந்தது. தாம் ஒரு போக பொம்மையாகவே பார்க்கப்படுகிறேன் என்பதை பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். 1996ல், செப்டம்பர் 23ஆம் தேதி சில்க் ஸ்மிதா உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியானது. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதாவின் மரணம் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. சில்க் ஸ்மிதா மறைந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் இன்று வரை அவரை கொண்டாடவே செய்கின்றனர்.