நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் தாம் அடைக்கப்பட்டிருந்தபோது தனது உயிரை காத்தவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அவருக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் ”சமூக நீதிக்கான கி.வீரமணி” விருது வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு திறமைகளுடன் நடமாடும் பல்கலைக்கழகமாகவும் தமிழினத்தின் விடிவெள்ளியாகவும் கி.வீரமணி திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.
கருணாநிதி இறந்த பின்னர் திக்கற்ற நிலையில் இருந்த தமக்கு கி.வீரமணி தைரியத்தையும், தெம்பையும் ஊட்டி அரசியல் பணிகளில் ஈடுபடச் செய்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது தாம் திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் நிலைக்கு தாம் வருவதற்கு கி.வீரமணி அளித்த ஊக்கம் முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.
நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது 23 வயதில் தாம் சிறைவாசம் அனுபவித்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறையில் தம்மை காவலர்கள் குண்டாந்தடி கொண்டு தாக்கியபோது, சிட்டிபாபுவுடன் இணைந்து அந்த அடிகளை தன் மீது தாங்கிக்கொண்டு தன் உயிரை கி.வீரமணி காத்ததாகவும் சுட்டிக்காட்டினார். ”தன்னுயிரையும் என்னுயிரையும் காத்த கறுப்புச் சட்டைக்காரர்” என்றும் கி.வீரமணி குறித்து உருக்கமாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் ஆளுநர் இன்னும் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனைக் கண்டித்து 90 வயதிலும் வீரமணி போராட்டக்களம் கண்டதை நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.