’நொய்யல் ஆற்றை மீட்க கையெழுத்து இயக்கம்’ – செளமியா அன்புமணி அறிவிப்பு

நொய்யல் ஆற்றை மீட்க 10 லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை வரும் மார்ச் 22-ம் தேதி நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார்…

நொய்யல் ஆற்றை மீட்க 10 லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை வரும் மார்ச் 22-ம் தேதி நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

கோவை சித்ரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பாக நொய்யல் ஆறு மீட்புக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. சௌமியா அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ’சிறுதுளி’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து சௌமியா அன்புமணி பேசியதாவது: நொய்யல் ஆற்றை மையப்படுத்தி உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களையும் இணைத்து பசுமை தாயகம் சார்பில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்கிறோம். நொய்யல் ஆற்றை எவ்வாறெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் நிறைய பேர் கலந்து கொண்டு நிறைய கருத்துகளை எடுத்து வைத்துள்ளனர்.

அண்மைச் செய்தி:சிங்காரச் சென்னை 2.0: திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.98 கோடி ஒதுக்கீடு

மாவட்ட வாரியாகவோ அல்லது தாலுக்கா வாரியாகவோ ஒற்றுமையான ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதோடு குறைந்த செயல்திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துளோம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என பல விஷயங்களை எடுத்து கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளோம்.

பத்து லட்சம் கையெழுத்துடன் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தலாம் என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. உத்தேசமாக அந்த கையெழுத்து இயக்கம் மார்ச் 22 உலக நீர் நாளில் துவங்கும். இதன்மூலம் மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்ற குறைந்தபட்ச திட்டம் உள்ளது. இதைத் தொடர்ந்து முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக வந்து இந்த ஒரு விஷயத்தைதான் பேசினார்கள். இவ்வாறு செளமியா அன்புமணி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.