டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் முயற்சித்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இஷான் கிஷான் 1 ரன்னுடன் வெளியேறினார். பின்பு சுப்மன் கில்லுடன் ராகுல் திரிபாதியுடன் கைகோர்த்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 35 பந்துகளில் 50 ரன்களை அடித்தார்.
நியூசிலாந்து பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட்ட சுப்மன் கில் 54 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில் 126 ரன்கள் எடுத்தார். மொத்தம் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
126 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். ஏற்கெனவே முதலிடத்தில் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் அடித்திருந்தார். இதுதான் இந்திய வீரர் டி20 போட்டியில் எடுத்த அதிக ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான போட்டியில் 118 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.