ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனத் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் சிலைக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள படத்திற்குத் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்துப் போராடியவர் காமராஜர் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது குலக்கல்வி வேறு அவதாரம் எடுத்துக்கொண்டிருக்கிறது, அதை எதிர்த்துப் போராடுவோம் எனத் தெரிவித்த அவர், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள தாழ்ந்த சாதி தொடர்பான கேள்வி விவகாரம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் கூறினார். மேலும், ஏற்கனவே காவி மயமாகிக்கொண்டிருக்கிறது என எச்சரித்த அவர், கடும் நடவடிக்கையை உயர் கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டும். இல்லையென்றால் திராவிடர் கழகம் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டம்?’
ஆளுநர் அரசாங்கத்தை நடத்தலாம் என நினைக்கிறார் எனத் தெரிவித்த அவர், ஆளுநருக்குச் சொந்தமாக எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதே முதற்கட்ட போராட்டம் என அவர் கூறினார்.








