சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி-வெங்கய்யா நாயுடு நெகிழ்ச்சி

வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், சமூக நீதிக்காக போராடியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னையில் கலைஞர் சிலையை திறந்து வைத்த பிறகு,…

வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், சமூக நீதிக்காக போராடியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சென்னையில் கலைஞர் சிலையை திறந்து வைத்த பிறகு, கலைவாணர் அரங்கில்  வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலையை திறந்துவைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சிறந்த மகனின் சிலையை திறந்துவைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் ஆற்றல் வாய்ந்த முதல்வராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. முதலமைச்சர் ஸ்டாலின் என்னை அழைத்தபோது, நான் உடனடியாக சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டேன். கலைஞர் ஒரு சிறந்த நிர்வாகி. நல்லாட்சியை வழங்கியவர். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக உழைத்தவர். நான் பள்ளி பருவத்தில் இருந்து அவரை பார்த்து வியந்து வருகிறேன். சென்னைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தேன். எம்ஜிஆர், காமராஜர், அண்ணா போன்ற மிகச் சிறந்த பேச்சாளர் கலைஞர். அவரது பேச்சைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் அவருடன் கலந்துரையாடி இருக்கிறேன். கருணாநிதியின் சிந்தனையால் இளம் வயதிலேயே மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

மக்களின் நலன்களுக்காகவே வாழ்ந்தவர் கருணாநிதி. அவர் ஒரு சக்தி வாய்ந்த தலைவர். சென்னை என் மனதுக்கு நெருக்கமானது. அரசியலில் இருந்தபோது கருணாநிதியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளேன். அவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கிறது. அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.  எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மக்களுக்காக உழைப்பதால் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். எதிரிகள் போல் செயல்படக்கூடாது. ஜனநாயகத்தையும், சட்டத்தையும் அனைவரும் மதிக்க வேண்டும். வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி. சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்தவாதி, நிர்வாகி, கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா என்று பன்முகத்தன்மை கொண்டவர் கருணாநிதி என்று வெங்கய்யா நாயுடு பேசினார்.

முன்னதாக, சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். அதன்பிறகு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவின் தோழமைக் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.