பட்டியலின, பழங்குடி மக்கள் மதமும், சாதியுமில்லாத மண்ணின் மைந்தர்கள். இந்து பெரும்பான்மை என காட்டுவதற்காக அவர்களை இந்து பட்டியலில் இணைத்து, சான்றிதழ் வழங்கி வருகிறோம். இது அவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என எம்.பி தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், “பெரும்பான்மை எனக் காட்டிக்கொள்வதற்காக பட்டியலின, பழங்குடி மக்களை இந்துக்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டுள்ள அரசு, பொருளாதாரம், கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்த, காலம் காலமாக இழைக்கப்படும் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் துளியும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதை சுதந்திர இந்தியா நமக்கு உணர்த்தியுள்ளது.
மேலும், அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும் அல்லது இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
அதேபோல, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருளர், குரும்பர்கள் கல்வி பயில, வேலைவாய்ப்புக்கு சாதிச் சான்றிதழ் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால், வீட்டு மனைப் பட்டா பெறுவதற்குக் கூட முடியாத சூழல் உள்ளது.
காலம் காலமாக நீர்நிலையோரத்தில் வசிக்கிற இம்மக்களை, நீங்கள் நீர்நிலைகள் அருகே வசிக்கிறீர்கள், பட்டா தர முடியாது என மறுக்கிறார்கள். ஆகவே, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாதிச் சான்றிதழை இலகுவாக வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்” என எம்.பி தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: