அமெரிக்காவில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில், விர்ஜினியா மாகாணத்தில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ரிச்மண்டில் உள்ள அல்ட்ரியா தியேட்டருக்கு வெளியே வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில், 36 வயதுடைய ரென்சோ ஸ்மித் என்பவரும், அவருடைய 18 வயது வளர்ப்பு மகனான சீன் டி ஜாக்சனும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் மேலும் 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிசூடு நடைபெற்ற இடத்தில் பல துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் விர்ஜினியா மாகாணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







