Uber ஓட்டுநர் செய்த அதிர்ச்சி செயல்… மிரண்டு போன பயணிகள்.. வீடியோ வைரல்!

உபர் ஓட்டுநர் செய்த அதிர்ச்சி செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மியாமி என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் பிரபலமானவர் ராப்பர் பாடகியான கிறிஸ்ஸி செலஸ். இவர் பாம் ஆஸ் கிறிஸ்ஸி என்றும் அழைக்கப்படுகிறார். கிறிஸ்லி செலஸ் மற்றும் அவரது தோழி உபரை (Uber) புக் செய்து காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அந்த காரை பெண் ஒருவர் ஓட்டிச்சென்றார். சிறிது நேரம் பயணம் நன்றாகவே சென்றுக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென நம்ப முடியாத சம்பவம் நடந்தது. அதாவது, காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, எந்த பக்கம் திரும்ப வேண்டும் என கிறிஸ்ஸி செலெஸ் ஓட்டுநரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதற்கு ஓட்டுநர்,  “நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டியதில்லை. அதற்காகத்தான் என்கிட்ட GPS இருக்கு” என்று கோபமாக பேசியதாக தெரிகிறது. பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடும் கோபமடைந்த ஓட்டநர், “இப்போது என் வாகனத்தை விட்டு இறங்கு. நீ இனிமேல் பயணத்தில் இல்லை. வெளியேறு” என்று கத்திக்கொண்டு ஏதோ ஒரு நம்பருக்கு கால் செய்துக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக ஓட்டுநர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கிறிஸ்ஸி செலஸ் மற்றும் அவரது தோழியை நோக்கி காட்டினார்.

இதனால், பயந்துபோன இருவரும் காரில் இருந்து இறங்கினர். அவர்கள் இருவரையும் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு ஓட்டுநர் காரை ஓட்டி செல்கிறார். கிறிஸ்ஸி செலஸ் தனது செல்போனில் இதனை வீடியோவாக பதிவு செய்தார். அதில், ஓட்டுநர் முகம், அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியது, கார் நம்பர் அனைத்தும் தெளிவாக பதிவானது. பின்னர் இந்த வீடியோ அவர் இணையத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வீடியோவிற்கு பதிலளித்த உபர் நிறுவனம், “இது கவலைக்குரியது, இவ்வாறு நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உபரின் வழிகாட்டுதல்களின்படி ஓட்டுநர்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. உபர் தற்போது அந்த ஓட்டுநரை அதன் தளத்திலிருந்து நீக்கி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறது” என்று குறிப்பிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.