சிவ சேனாவைச் சேர்ந்தவர் மீண்டும் முதலமைச்சராவார் என்று அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவ சேனா பத்திரிகையான சாம்னாவின் நிர்வாக ஆசிரியரும் அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவில் சிவ சேனாவுக்கும் சிவ சேனாவுக்கும் இடையே மோதல் நிகழ வேண்டும் என்று டெல்லி விரும்புகிறது என குறிப்பிட்டுள்ள உத்தவ் தாக்கரே, மராத்தி பேசும் மக்களை பிரிப்பதே இதன் நோக்கம் என குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 2019ல் தான் கேட்டது என்ன? சிவ சேனாவுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதுதான் என குறிப்பிட்டுள்ள உத்தவ், அதுகூட தனக்காக அல்ல என கூறியுள்ளார். சிவ சேனாவைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆவார் என பால் தாக்கரேவுக்கு அளித்த உறுதிமொழி காரணமாகவே தான் அதை கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அதனை ஒப்புக்கொண்ட பாஜக பிறகு ஏற்க மறுத்ததால்தான் மகா விகாஸ் கூட்டணி உருவானது என்றும் அவர் கூறினார்.
அந்த பரிசோதனை முயற்சி தவறு அல்ல என தெரிவித்துள்ள உத்தவ், அந்த கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
மகாராஷ்ட்ராவில் ஆட்சியைப் பிடிக்க அனைத்தையும் விட்டுக்கொடுக்க பாஜக முடிவு செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய உத்தவ், அதனால்தான் முதலமைச்சர் பதவியைக் கூட விட்டுக்கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம், மகாராஷ்ட்ராவில் மீண்டும் சிவ சேனா முதலமைச்சர் உருவாவார் என தெரிவித்துள்ள உத்தவ், இதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறினார்.








