குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரெளபதி முர்முவுக்கு சிவ சேனா எம்பிக்களில் 16 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிரணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஷா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக சிவ சேனா இன்று ஆலோசனை மேற்கொண்டது. இதில், எம்பிக்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் தலைமையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 18 எம்பிக்களில் 13 பேர் நேரில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்பி கஜானன் கீர்த்திகார் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் பங்கேற்காத 3 எம்பிக்களும் இதே கருத்தை தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், இந்த கூட்டத்தில் பாவன கவாலி, ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகிய இரு எம்பிக்கள் பங்கேற்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டுக்கொண்ட உத்தவ் தாக்கரே தனது முடிவை இன்னும் ஓரிரு நாட்களில் தெரிவிப்பதாகக் கூறி இருப்பதாகவும், அவர் நிச்சயம் திரெளபதி முர்முவை ஆதரிப்பார் என நம்புவதாகவும் கஜானன் கீர்த்திகார் குறிப்பிட்டுள்ளார்.










