சிவ சேனாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை மதியம் 1 மணிக்கு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவ சேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து, அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்து சுயேட்சை எம்எல்ஏக்கள் 7 பேரும் அவருடன் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சிவ சேனா மாவட்டத் தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே உரையாடினார்.
அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சியை உடைக்க திட்டமிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் அலுவலகத்தைவிட்டு சொந்த வீட்டுக்கு வந்திருக்கலாம் ஆனால், போராடும் எண்ணத்தை விட்டுவிடவில்லை என அவர் தெரிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டேவுக்காக தான் அனைத்தையும் செய்ததாகத் தெரிவித்த உத்தவ் தாக்கரே, தனது துறையையும் அவருக்கு கொடுத்ததாகக் குறிப்பிட்டார். அதோடு, ஏக்நாத் ஷிண்டேவின் மகன் தற்போது எம்பி என தெரிவித்த அவர், ஆனால் தனது மகன் மட்டும் குறிவைக்கப்படுவதாகக் கூறினார்.
தனக்கு முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள உத்தவ் தாக்கரே, கழுத்துப் பகுதியிலும் தலையிலும் தனக்கு வலி இருப்பதாகக் குறிப்பிட்டார். தன்னால் சரியாக வேலை செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, தனது கண்களைக் கூட திறக்க முடிவதில்லை என கூறியுள்ளார். எனினும் அது குறித்து தான் கவலைப்படவில்லை என்றும், சிவாஜி மகாராஜ் தோற்கடிக்கப்பட்டாலும் மக்கள் அவரோடு இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினார். சிவ சேனாவில் பிளவு ஏற்படாமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் பேசியதாகவும், முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொடுப்பது குறித்தும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.











