கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) அணிவகுத்து சென்று தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியிருக்கிறார்கள். அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள், உள்ளே இருந்த உபகரணங்களை எல்லாம் அடித்து நொறுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் (ESZ) தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவில் ராகுல் காந்தி தலையிடவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்குப் பிறகு, நடந்த மோதலில் காங்கிரஸ் அலுவலக ஊழியர்களும் காயமடைந்ததாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 100 இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும் அவர்களில் முதற்கட்டமாக 8 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் “ராகுல் காந்தியின் அலுவலகம் மீதான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது ஜனநாயக முறையில் போராட்டங்களை ஊக்குவிக்கும் நிலம். ஆனால் வன்முறையை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








