திறந்தவெளியில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாக்கள் – குப்பையில் வீசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

பூந்தமல்லியில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாக்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அள்ளி குப்பையில் வீசினர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.…

பூந்தமல்லியில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாக்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அள்ளி குப்பையில் வீசினர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட ஒன்பதாம்
வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில்
உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் சவர்மா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சவர்மா கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். தற்போது பூந்தமல்லி பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஹோட்டல்கள் மற்றும் சவர்மா கடைகளில் திறந்தவெளியில் உணவுகள் வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்குள்ள சிக்கன் ஷவர்மாக்களில் மண் தூசிகள் அதிக அளவில் படுகிறதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து நேரில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்கு சென்று சுகாதாரமற்ற முறையில் இருந்த சவர்மா மற்றும் சிக்கன் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்து குப்பை தொட்டியில் வீசினர். குறிப்பாக ஒரு கடையில் சிக்கன் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சென்று சாப்பிடும் சிக்கனில் மண் நர, நர என உள்ளதா என கேட்டபோது தயங்கிய வாடிக்கையாளர்கள்
சிக்கனில் மண் உள்ளது என்று கூறியதையடுத்து கடை உரிமையாளரை நேரில் அழைத்து அவர்கள் முன்னிலையில் அந்த சிக்கனை கொண்டு சென்று குப்பையில் கொட்டினார்கள்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள் தரமற்ற மற்றும் சுகாதார முறையில் விற்பனை செய்து வந்த 10 கிலோ
சவர்மா சிக்கன் பொருட்களை அள்ளி குப்பையில் கொட்டி அதன் மீது பினாயில்
ஊற்றினார்கள். மேலும் தொடர்ந்து இதே போல் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் சிக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.