அரிசி விலை கடும் உயர்வு: ‘வெற்றி விலை உயர்வுத் திட்டம்’ – கனிமொழி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் விலையேற்றத்தை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை கிலோவுக்கு 20 முதல் 27 ரூபாய் வரை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி வகைகளைப் பொறுத்து, 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசியின் விலை 300 முதல் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

வேகவைத்த பொன்னி அரிசி, பச்சரிசி மற்றும் நீராவியைப் பயன்படுத்தி பதப்படுத்தப்படும் ‘ஸ்டீம்’ (steam) அரிசி ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்தில் 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை வேகவைத்த பொன்னி அரிசியின் விலை 1,400 ரூபாயாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் இதன் விலை 500 ரூபாய் அதிகரித்து, 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், ஜூலை மாதத்தில் 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை ஆர்.என்.ஆர் (RNR) பொன்னி அரிசியின் விலை 1,700 ரூபாயாக இருந்தது; தற்போதும் அதன் விலை 1,700 ரூபாயாகவே உள்ளது.

இந்நிலையில், அரிசி விலை உயர்வை சுட்டிக்காட்டி திமுக எம்பி கனிமொழி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வெற்றி விலை உயர்வுத் திட்டம், CM BRO-வின் அதிரடி OFFER, புழுங்கல் பொன்னி அரிசி ரூ.75 என்று பதிவிட்டுள்ளார்.” ரூ.52-க்கு விற்கப்பட்ட கிலோ அரிசியின் விலை தற்போது ரூ.75-க்கு விற்கப்படுகிறது என்று தெரிவித்து அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.