மணிரத்னம், ஷங்கர் உட்பட 11 இயக்குநர்கள் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளனர்.
இயக்குநர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி வருகிறார். பிரமாண்டமான இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். சுமார் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாவதாகக் கூறப்படும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷனுடன் இணைந்து மணிரத்னமும் தயாரிக்கிறார். இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது.
இயக்குநர் ஷங்கர் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்படாத நிலையில், ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.அடுத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க உள்ளார்.
இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னமும் ஷங்கரும் இணைந்து புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்துக்கு ரெயின் ஆன் பிலிம்ஸ் (Rain On Films) என்ற பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலம் படங்கள், ஓடிடி தளங்களுக்கான தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கின்றனர். இவர்களுடன் மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட 11 பேர் இயக்குநர்களும் இணைந்துள்ளனர்.
இவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். அவர் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர், மணிரத்னம், ஷங்கர் தயாரிக்கும் படத்தை இயக்குவார் என தெரிகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளின்போது, மிஷ்கின் அலுவலகத்தில் இயக்குநர்கள் கூடினர். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.









