சொகுசு கப்பலில் நள்ளிரவில் நடந்த போதைப் பொருள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரை மாய்த்துக் கொண்ட பிறகு, இந்தி திரை யுலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தி, அவர் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசார ணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரில் நடத்தப்பட்ட சோதனையில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அந்த கப்பலில் சாதாரணப் பயணிபோல சென்றனர். பின்னர் கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட் களை சிலர் பயன்படுத்தத் தொடங்கினர். கையும் களவுமாக அவர்களைப் பிடித்த போலீ சார், நள்ளிரவில் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட 8 பேர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனும் ஒருவர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நடிகர் ஷாருக்கானின் மகன் போதை வழக்கில் சிக்கியிருப்பது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.








