பிரதமர் மோடி 25 ஆண்டுகால அரசு சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு டெல்லியில் ‘விக்சித் பாரத் சங்கல்ப்’ சபாவில் உரையாற்றினார். அந்த உரையில், “140 கோடி இந்தியர்களின் நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன். 2001-ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நான் பதவியேற்றபோது, இத்தகையதொரு மைல்கல்லை எட்டும் தருணம் வரும் என்று நான் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
இன்று, அரசு தலைமை பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.இது மக்களின், இடைவிடாத ஆசிகளின் விளைவாகும். இது தனிப்பட்ட முறையில் பெருமை தேடும் நேரம் அல்ல மாறாக எனது பயணம் மக்களின் சாதனை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் சகாக்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களின் பாதங்களில் தலைவணங்கி வணங்குகிறேன்.
இந்த காலகட்டத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளன, சட்டமன்றத் தேர்தலோ அல்லது மக்களவைத் தேர்தலோ எதுவாக இருந்தாலும், சேவை செய்ய மக்கள் என்னையே தேர்ந்தெடுத்தனர். இன்று, இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். ‘சேவா ஜோதி யாத்திரை’யில் பங்கேற்ற அனைத்துக் குடிமக்களையும் நான் பாராட்டுகிறேன். இன்று நான் எந்த நிலையில் இருந்தாலும், எந்தப் பதவியை வகித்தாலும், அதற்கான மிகப்பெரிய பங்களிப்பு மக்களுக்கே உரியது. கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையும், எண்ணற்ற தொண்டர்களின் கடின உழைப்புமே எப்போதும் எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றன.
இன்று காலை, நான் ஸ்ரீ விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தேன். நாடு, 140 கோடி இந்தியர்கள் மற்றும் எனக்காகவும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன். நாட்டிற்காக இன்னும் அதிக ஆற்றலுடன் பணியாற்றுவதற்கான வலிமையையும் திறனையும் எனக்கு அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டேன். எனது சக குடிமக்களுக்கு இன்னும் சிறப்பாகவும், இரவும் பகலும் அயராது சேவை செய்யவும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக இருந்தது.
இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, நன்றியுணர்வைத் தவிர வேறெதையும் உணரவில்லை. எனக்கு எதையாவது கற்றுக்கொடுத்த ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு அனுபவத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் எனக்குப் பணிவைக் கற்றுத்தந்தனர்; என்னைக் கீழே தள்ளியவர்கள், மீண்டும் எப்படி எழுந்து வருவது என்பதைக் கற்றுத்தந்தனர். எனக்கு ஆதரவளித்தவர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். அதேவேளையில், என்னை விமர்சித்தவர்கள் எனக்குள் நானே உற்றுநோக்கக் கற்றுக்கொடுத்தனர்.
இந்த 25 ஆண்டுகால மக்கள் நம்பிக்கை மற்றும் அனுபவம் என்பது ஒரு மிகப்பெரிய சொத்து. இந்தச் சொத்து மோடிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது நாட்டிற்குச் சொந்தமானது.பாரத மாதாவின் ஒவ்வொரு குழந்தையும் இந்தச் சொத்தைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். இந்த நேரத்தில், நான் பள்ளிக்குச் சென்ற நாட்களை நினைவுகூர்கிறேன், அங்கு எங்கள் ஆசிரியர் எங்களுக்குப் பலவிதமான பாடங்களைக் கற்றுக்கொடுத்தனர், வகுப்பிற்கு முதலில் வரும் மாணவர்களில் என் பெயரும் எப்போதும் இடம்பெற்றிருக்கும். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆர்வம் என் வாழ்வின் ஒரு பகுதியாக மாறியது. இன்றும் கூட, நான் என்னை ஒரு மாணவனாகவே கருதுகிறேன்.
ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள நான் முயற்சிக்கிறேன். நான் ஒருபோதும் தனிமையில் இருப்பதாக உணர்ந்ததில்லை. இந்தியாவின் கலாச்சார ஆன்மாவைப் பாதுகாக்கும் எண்ணற்ற ‘தன்னார்வலர்கள்’ உள்ளனர். ‘பாரதத்திற்குச் சேவை செய்வது’ என்பதே அவர்களின் ஒரே நோக்கம்.அவர்கள் இந்த உணர்வுடன் வாழ்கிறார்கள். “நாங்கள் சேவகர்கள்; மனிதகுலத்தின் சேவகர்கள்” என்று ஒவ்வொரு கணமும் தங்களுக்குள் நினைவூட்டிக் கொள்கிறார்கள். உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் நாட்டிற்குத் தொடர்ந்து சேவை செய்யும் ஒவ்வொரு சுயம்சேவகருக்கும், செயல்வீரருக்கும் நான் மரியாதையுடன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.




