மணிப்பூரில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
கடந்த மே மாதம் இருபெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
“மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற இழிச்செயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிப்பூர் மாநில முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.







