ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேரிட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. உள்ளூர் அணிகளுக்கு இடையிலான இந்த டி20 தொடரில் பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சால்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது உயிரிழப்புப் படை தாக்குதல் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த 4 ரசிகர்கள் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நஸீப் கான் தெரிவித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தவுடன் அச்சமடைந்த பார்வையாளர்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காபூலில் இதேபோல மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








