பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய நிலையில், சிறையின் தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான சிறைகளுள் ஒன்று பாளையங்கோட்டை சிறை. அப்போது சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அடைத்து வைக்க இந்த சிறை பயன்படுத்தப்பட்டது. திருநெல்வேலி நகரில் உள்ள இந்த சிறைச்சலை தற்போது, தமிழ்நாடு சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக பாயைங்கோட்டை சிறைச்சாலை விளங்குகிறது. இங்கு கொடுங்குற்றம் புரிந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரை அடைத்து வைக்கின்றனர். இதனால் இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறை வளாகத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களும், அதன் மேல் மின்னூட்டப்பட்ட இரும்புக்கம்பி வளையங்களும், 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரங்களும் உள்ளன. வளாகச்சுவரைச் சுற்றிலும் 10அடிக்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராதாபுரம் அருகே உள்ள மதகநேரியை சேர்ந்த டேவிட் (வயது 46) என்பவருக்கு குற்ற வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த 27-ம் தேதி டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறை அங்காடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, கவனகுறைவாக பணியாற்றியதாக சிறையின் தலைமை காவலர் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தப்பி ஓடிய சிறை கைதி டேவிட் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








