மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசு தலைவர் விளக்கம் கோரிய மனு தொடர்பான வழக்கு இன்று 8 வது நாளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரித்தது.
அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மசோதா ஒப்புதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கால நிர்ணயம் செய்தது தவறான முன்னுதாரணம். ஏனெனில், மசோதா தொடர்பாக குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள்ளாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அதேபோன்று முதற்கட்டமாக ஆளுநருக்கு அனுப்பும்போது ஒரு மாதத்திற்குள் அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு வரம்பு நிர்ணயம் செய்தப்பட்டுள்ளது ஒருவேளை இந்த கால வரையறைக்குள் மசோதா மீது முடிவெடுக்கப்படவில்லை என்றால் இந்த நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு ஒரு ரிட் மனு மூலம் ஆளுநருக்கோ அல்லது குடியரசு தலைவருக்கோ மசோதா மீது முடிவெடுக்க உத்தரவு பிறப்பிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக இருக்கும் தரவுகளை எடுத்து பார்த்தோம் என்றால் 90% மசோதாக்கள் மீது ஒரு மாதத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுத்த வரைக்கும் சர்ச்சையாக இருக்கக்கூடிய இரண்டு மசோதாக்களை விடுத்து பிற மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மாநில நலனுக்கு விரோதமாக இருந்தாலும் சில நேரத்தில் மக்களின் உணர்வை காரணம் காட்டி சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்படுகிறது என்றால் அந்த மசோதாவை உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே மசோதா ஒப்புதல் விவகாரத்தில் கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் முடிவெடுத்து தான் ஆக வேண்டும் என்று கால வரம்பை நிர்ணயம் செய்வது என்பது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது.
கடந்த 75 ஆண்டுகளான வரலாற்றில் ஆளுநர்கள் 98 சதவீத மசோதாக்களுக்கு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஒப்புதல் வழங்கி இருக்கிறார்கள் அல்லது அதன் மீது முடிவெடுத்திருக்கிறார்கள். இதுவரை 33 மசோதாக்கள் குறிப்புகளுடன் திருப்பி அனுப்ப பட்டன. 12 மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிந்ததை தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.







