இந்திய டெஸ்ட் அணியை வெல்வது ஆஷிஸ் தொடரை வெல்வதை விட சிறப்புமிக்கது என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் 2 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியை வீழ்த்துவது என்பது ஆஷிஸ் தொடரில் பெரும் வெற்றியை விட பெரியது என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இங்கிலாந்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்குச் சென்று ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஆஷஸ் தொடரை வெல்வதை விட சிறப்புமிக்கதாக மதிப்பிடப்பட வேண்டும். சமீபத்தில்தான் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. இது, இந்திய அணி வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் ஒன்றாக அமைந்திருக்கும். அத்துடன் அஷ்வின் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது இங்கிலாந்து வீரர்களுக்கு கடுமையான ஒன்றாகவே இருக்கும். அஷ்வினை எதிர்கொள்ள இங்கிலாந்து விரர்கள் அனைவரும் கேப்டன் ரூட் பாணியை பின்பற்றி ஆட வேண்டும்” என தெரிவித்தார்







