உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் அவரை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு இரண்டாவது நாளாக நீதிபதிகள் போப்பண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஏற்கனவே நீதிபதி ராமசுப்பிரமணியம் அமர்வில் முன்வைத்த வாதங்களை செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் முன் வைக்கிறது அதை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இது சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான வழக்கு, எனவே தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க கூடாது என அமலாக்கத்துறை கூற முடியாது என வாதிட்டார்.
இதனை அடுத்த் செந்தில் பாலாஜி தரப்பு தொடர்ந்து வாதங்களை முன்வைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
பிறகு செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த வாதங்களாவது:
காவல்நிலையத்திற்கு பொறுப்பாக உள்ள காவல்துறை அதிகாரிக்கும், அமலாக்கத்துறை விசாரணை அதிகாரிக்கும் உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் வழக்கின் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கஸ்டடி எடுக்க அதிகாரம் இல்லை என்பது அந்த தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமலக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும். ஆனால் அவ்வாறு இருந்தால் அது PMLA விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது.
செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் தான் உள்ளார். வேண்டுமானால் அமலாக்கத்துறை தற்போது கூட அவரை விசாரணை செய்யலாம், ஒருவர் நீதிமன்றக் காவலில் இருக்கும் போது, விசாரிக்க எந்த தடையும் இல்லை. கைதுசெய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேல் சென்றால், அது நீதிமன்ற காவலாக மட்டுமே இருக்க முடியும், போலீஸ் காவலாக இருக்க முடியாது. இவ்வாறு கபில் சிபில் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விசாரணை அமைப்பு ஒருவரை எதற்காக கைது செய்கிறது, அவரிடம் இருந்து கூடுதல் விசாரணை நடத்தி தகவல்களை பெற வேண்டும் என்பதற்காகத்தானே. சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 19ன் கீழ் ஒருவர் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்க துறையின் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர் அல்லது கைது செய்வதற்கு அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரி சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய முடியும் தானே? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த கபில் சிபல், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 167 அமல்படுத்தப்பட்டுவிட்டது, அப்படியெனில் வேறு எந்த நடைமுறையும் இதற்கு மேல் இருக்க முடியாது. ஏனெனில் கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்த வேண்டும், அவ்வாறு ஆஜர்படுத்திய பின்னர் காவல் தொடர்பான முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும். மேலும் கைது செய்யப்பட்ட 15 நாட்கள் வரை மட்டுமே போலீஸ் காவலை அனுமதிக்க முடியும் என்று வாதிட்டார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், சட்ட விரோத பணபரிவர்த்தனை தடுப்பு விதிகளின் கீழ் அமலாக்கத்துறைக்கென உள்ள அதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது. விசாரணை செய்யவும் கைது செய்யவும் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் விதிகள் வழிவகை செய்துள்ளது என எடுத்துரைத்தனர்.
இதற்கு பதில் அளித்த செந்தில்பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜி இந்த வழக்கில் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம் அது வேறு பிரச்சனை. இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தபட்டுள்ளது என்பதை தான் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, அரசியல் வாதங்களை முன்வைக்காமல், தரவுகள் அடிப்படையில் வாதிட வேண்டும் என வலியுறுத்தினார். சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ், தவறான கைதுக்காக ஒரு அதிகாரிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அப்படியெனில், இதுவரை அவ்வாறு எத்தனை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்? தண்டனை பெற்றுள்ளனர்? என வினவினார்.
தொடர்ந்து வாதிட்ட அவர், FERA மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு காவல்துறைக்கான அதிகாரமே வழங்கப்படாதபோது அல்லது அதிகாரம் இல்லாதபோது அவர்கள் எந்த சட்ட விதியின் அடிப்படையில் ஒருவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் கோர முடியும் ?ஒருவர் புகார் அளிக்கலாம், அதற்கு ஆதாரங்கள் இருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். எங்கள் வழக்கில் ஒருவித hybrid சூழல் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் உள்ளது என கபில் சிபில் வாதிட்டார்.
இதனை அடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.







