1980-ல் தொடங்கி இன்று வரை தனது காமெடியால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கும் வெகு இயல்பான மனிதர்….தன்னை தானே வருத்திக் கொண்டு பிறரை சிரிக்க வைக்கும் அற்புத கலைஞர்… திரையில் கதாநாயகர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருந்தவர்… தமிழ் சினிமாவில் 80,90-களுக்கு பிறகு எத்தனையோ நகைச்சுவை நட்சத்திரங்கள் வந்திருந்தாலும், இன்று வரை யாராலும் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத நகைச்சுவை கலைஞர் என்றால் அது இவராக மட்டும் தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு புகழ்பெற்ற கலைஞராக, ரசிகர்களின் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் நகைச்சுவை ஜாம்பவானான செந்தில் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் , முதுகுளத்தூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற கிராமத்தில் 1951-ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராமமூர்த்தி – திருக்கம்மாள் தமபதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் முனுசாமி என்னும் செந்தில். இளஞ்செம்பூர் கிராமம் வானம் பார்த்த பூமி என்பதால், செந்தில் வீட்டில் நிறைய நிலங்கள், பெரிய வீடு என்று சகல வசதிகளும் இருந்தும் விவசாயம் செய்ய முடியாமல், செந்திலின் தந்தை ராமமூர்த்தி அந்த கிராமத்தில் பழச்சரக்கு கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது குடும்பத்தை அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கடைக்காரர் குடும்பம் என்று தான் அழைப்பார்களாம் .
இப்படி செல்வ செழிப்புள்ள வீட்டில் பிறந்த செந்திலுக்கு படிப்பு மீது பெரிய அளவில் நாட்டம் இல்லை என்பதால், பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் 5-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டார். பிறகு தந்தைக்கு உதவியாக கடையில் வியாபாரம் செய்து வந்தவரை, கண்டிப்பும், கராறும் மிக்க தந்தை ராமமூர்த்தி கோபத்தில் திட்டி ,அடித்துவிட, செந்திலும் கோபித்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் சொல்லமால், கடையில் கல்லாவில் இருந்த கொஞ்ச பணத்தை கையில் எடுத்துக் கொண்டு அவரது 13-வது வயதில் ரயில் ஏறி சென்னைக்கு வந்துவிட்டாராம்.
மகனை காணவில்லை என்றதும், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் பதறிப்போய் ஊர் ஊராக சுற்றி தேட ஆரம்பிக்க, அவரோ சென்னை வந்த ஒரு சில நாட்களிலேயே அலைந்து திரிந்து, முதலில் எண்ணெய் ஆட்டும் நிலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். சிறிது காலம் அந்த என்ணெய் கடையிலேயே பணியாற்றியவர், பிறகு அங்கிருந்து மாறுதல் பெற்று ஒரு தனியார் மதுபான கடையிலும் சர்வராக பணிபுரிந்துள்ளார். மதுபானக் கடையில் பணியாற்றி கொண்டிருந்த நேரத்தில் தான், அங்கு வரும் ஒரு சில சினிமா பிரபலங்களின் அறிமுகம் கிடைத்து , அவர்கள் மூலமாக நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று நடிக்க ஆரம்பித்துள்ளார் .
அப்படி நாடகங்களில் நடிக்கும் போதுதான் எழுத்தாளர் வீரப்பன், கவுண்டமணி போன்றவர்களின் அறிமுகமும் செந்திலுக்கு கிடைத்துள்ளது .நாடகங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றிருந்ததை வைத்து சினிமா துறைக்குள் எளிதாக நுழைவதற்கான வாய்ப்பு அதிலும் முதன் முறையாக புரொடக்ஷன் மேனஜர் ஒருவரின் உதவியால் மலையாளத் திரையுலகில் நுழைவதற்கான வாய்ப்பு செந்திலை தேடி வந்ததது . அந்த படம் தான் பிரேம் நஸிர் நடித்து 1980-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இதிக்கர பக்கி என்றப் படம். இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி சிறப்பாக நடித்திருந்த போதிலும், படம் வெளிவர தாமதமாகவே , அதனால் 1979-ஆம் ஆண்டு இறுதியில் தமிழில் வெளிவந்த ஒரு கோயில் இரு தீபங்கள் திரைப்படம் செந்தில் நடிப்பில் வெளிவந்த முதல் படமாக அமைந்து போனது.
81-க்கு பிறகு கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை, மலையூர் மம்பட்டியான், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தால், நான் பாடும் பாடல், நல்ல நாள் என ஏராளமான வெற்றிப்படங்களில் வரிசையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடிக்க ஆரம்பித்தவருக்கு ,1983-ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த மலையூர் மம்பட்டியான் என்ற படம் நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது .
குறிப்பாக ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில், விஜயகாந்த் ,ரேவதி நடிப்பில் 1984-ஆம் ஆண்டு வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி கவுண்டமணியுடன் தொடர்ந்து பயணித்து அடுத்த அடுத்த வெற்றிகளை எட்டி பிடிக்க முதல் துவக்கமாகவும் அதன் வாயிலாக புகழ்பெறும் படியான படமாகவும் அமைந்து போனது . இதில் கோமுட்டித்தலையன் என்ற கதாபாத்திரத்தில், கவுண்டமணியோடு இவர் சேர்ந்து செய்திருந்த அலப்பறைகள் இன்றும் யாராலும் மறக்க முடியாது .
அதிலும் பெட்ரோமாக்ஸ் லைட் எப்படி எரியும் என்று செந்தில் அப்பாவியாக கேட்பதும், அப்படி கேளுடா என்று கவுண்டமணி உற்சாகமாக விளக்குவதும், இது எப்படிண்ணே எரியும் என்று மேன்டிலை கையில் எடுத்து செந்தில் பொடி பொடியாக்குவதும் அன்றைய ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட கிளாஸிக் காமெடி காட்சி . அதேபோல் நாயை கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டா நாயைக் காணோம் என்ற செந்திலின் வசனமும் அந்தப் படத்தில் புகழ்பெற்றது.
ஏற்கனவே நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் இருந்து பெரும்பாலான படங்களில் கவுண்டமணியும் -செந்திலும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனி தனி காட்சிகளிலோ வந்து சில படங்களில் நடித்திருந்தாலும் ,இப்படத்திற்கு பிறகுதான் இவ்விருவரின் இணை தமிழ் சினிமாவில் பிரபலமாகி இவர்கள் இருவரது காமெடி காட்சிகளுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக ஆரம்பித்தது .
1970 களின் இறுதியில் தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஓடி வந்த பிறகு சினிமாவில் பெரிதாக சந்திக்காமல் மீண்டும் ஊருக்கு திரும்ப கூடாது என்று வைராக்கியமாக இருந்த செந்தில், சினிமாவிற்கு வந்து மக்கள் கொண்டாடும் நகைச்சுவை நடிகனாக மாறிய பிறகே 14-ஆண்டுகள் கழித்து ,தனது சொந்த ஊரான இளஞ்செம்பூர் கிராமத்திற்கு அவரது அம்மா, அப்பாவை பார்க்க சென்றாராம். அப்போது ஊரே சேர்ந்து அவரை வரவேற்றத்தை பார்த்து செந்திலின் தந்தைக்கு சந்தோசம் தாங்க முடியாமல் மகனை கட்டி அணைத்து ஆரத்தழுவிக் கொண்டாராம் .
அதுமட்டுமில்லாமல் நீ ஊரில் இருந்து மீண்டும் சென்னைக்கு போகும் பொழுது, உன் மனைவியோடு தான் போக வேண்டும் அதனால் இங்கையே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டு போ என்று செந்திலின் அப்பா உட்பட உறவினர்கள் அனைவரும் சொல்ல, செந்திலும் அதற்கு சம்மதம் தெரிவித்து, தனது கிராமத்திற்கு அருகிலேயே, தெரிந்த உறவுக்காரர்கள் மூலமாக 1984-ஆம் ஆண்டு கலைச்செல்வி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாராம்.
செந்திலுக்கு மணிகண்டபிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களையும் நன்கு படிக்க வைத்து மூத்த மகன் மணிகண்ட பிரபு பல் மருத்துவராகவும், இரண்டாவது மகன் சிறுத்தை சிவாவிடம் இணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவருக்குமே திருமணம் முடிந்து பேத்திகளோடு மிகவும் சந்தோசமாக, கூட்டு குடும்பமாக சென்னை வடபழனி அருகே உள்ள சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி எம்ஜிஆரின் தீவிர ரசிகராகவும் இருந்த செந்தில், பின்னாளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். அக்கட்சியில் வேட்பாளர்களை ஆதரித்துப் பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் தொடங்கிய அமுமுக கட்சியில் இணைந்தவர், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகப் சிறிதுகாலம் பணியாற்றினார். பிறகு 2020 ஆம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது பெயரளவில் மட்டுமே அக்கட்சியில் பயணித்து வருகிறார். ஒரு துறையில் ஜாம்பவானாக ஜொலிக்க வேண்டும் என்றால் தங்களது கனவு பாதையில் மனம் தளராமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்கு இந்த நகைச்சுவை ஜாம்பவானின் வாழ்க்கை ஒரு சான்று. இன்று 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நமது நகைச்சுவை ஜாம்பவான் செந்திலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.















