கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டில் காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த மே 26ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, கரூரில் 3-வது கட்டமாக இன்று ராயனூர் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மணி என்கிற சுப்பிரமணி வீடு, சின்னாண்டான் கோவில் பகுதியில் உள்ள ராம விலாஸ் நூற்பாலை உரிமையாளர் ரமேஷ் பாபு அலுவலகம், கரூர்-கோவை சாலையில் உள்ள கார்த்திக்கின் உரிமையாளரின் சக்தி மெஸ் உணவகம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள ராமவிலாஸ் வீவிங் ஃபேக்டரி, மாயனூர் பகுதியில் உள்ள ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் பண்ணை வீடு மற்றும் இரண்டு நிதி நிறுவனங்கள் என 10 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று மதியம் முதல் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகம், கரூர் கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் உணவகம் என 2 இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிவிட்டு, மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். மீண்டும் வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் பகுதியில் முகாமிட்டு சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கரூர் ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டில் காலை தொடங்கி வருமான வரித்துறை சோதனை இன்று மாலை நிறைவு பெற்றது.
- பி.ஜேம்ஸ் லிசா









