பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
” மதிப்பிற்குரிய தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவருடன் பேசினேன், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியா மற்றும் தற்போதைய பாகிஸ்தான் பகுதியான கராச்சியில் தான் 1927ம் ஆண்டு அத்வானி பிறந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அத்வானி இளங்கலை சட்டம் பயின்றுள்ளார்.

1940 காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பி இணைந்த அத்வானி அந்த அமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு பெற்றார். இதனைத் தொடர்ந்து பாஜக நிறுவனர்களில் ஒருவரான அத்வானி 1990 களின் முற்பகுதியில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான ரத யாத்திரையின் மூலம் கட்சியை தேசிய கவனம் ஈர்க்க வைத்தார்.

எல்.கே. அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் துணைப் பிரதமராகவும், பல அரசுகளில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1970 முதல் 2019 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்துள்ளது.







