விரட்டும் வறுமை: விருதுகளை விற்று மருத்துவச் செலவு செய்த பிரபல நடிகை!

வறுமை காரணமாக, தனக்கு கிடைத்த விருதுகளை விற்று மருத்துவச் செலவை கவனித்துக் கொண்ட பிரபல நடிகை, நிதியுதவி கோரி இருக்கிறார். கொரோனா 2 வது அலை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொற்று…

வறுமை காரணமாக, தனக்கு கிடைத்த விருதுகளை விற்று மருத்துவச் செலவை கவனித்துக் கொண்ட பிரபல நடிகை, நிதியுதவி கோரி இருக்கிறார்.

கொரோனா 2 வது அலை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பட வாய்ப்பு கிடைக்காததால், மூத்த நடிகை ஒருவர் தனது விருதுகளை விற்று மருத்துவ செலவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகை பவலா சியாமளா (Pavala Syamala). குணசித்திரம் மற்றும் காமெடி கேரக்டர்களில் நடித்து வந்த இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடனும் நடித்திருக்கிறார்.

ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகரில் வசித்து வரும் இவருக்கு, முதுமை காரணமாக சினிமா வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இந்நிலையில் இவர் மகள் டிபி நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவரை, சியாமளா கவனித்து வந்தார்.

சிகிச்சை முடிந்து வந்ததும் மற்றொரு சோகம் அவரை தாக்கியது. மகளின் கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து தொடர்ந்து மருத்துவச் செலவுகள் அதிகரித்து வந்ததால், தனது சேமிப்புகளை கொண்டு கவனித்துக் கொண்டார்.

இப்போது வருமானம் இல்லாத நிலையில், கடும் கஷ்டத்தில் தவித்து வருகிறார். இவர் தனக்கு கிடைத்த விருதுகளை விற்றும் மருத்துவச் செலவுகளைக் கவனித்துள்ளார். இந்நிலையில் இப்போது, நடிகர், நடிகைகளிடம் பண உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இதுபற்றி சியாமளா கூறும்போது, ’இதற்கு முன் நடிகர்கள் சிரஞ்சீவி ரூ.2 லட்சமும் பவன் கல்யாண் ரூ.1 லட்சமும் நடிகை கராத்தே கல்யாணி ரூ. 10 ஆயிரமும் உதவி செய்தனர். அவை மருத்துவச் செலவுக்கே சரியாகிவிட்டது. தெலுங்கானா அரசிடமிருந்து ஒவ்வொரு மாதமும் பென்சன் வந்துகொண்டிருந்தது. மூன்று மாதங்களாக அதுவும் வரவில்லை. இப்போது கொரோனா காலம் என்பதால் யாரும் உதவ முன் வரவில்லை. எங்களால் மளிகை சாமான்கள் கூட வாங்க முடியவில்லை. இப்போது ஆதரவற்றவர்களாக இருக்கிறோம்’ என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.