கருப்பு வெள்ளை காட்சியில் திரை விரிய, நிறைமாத கரிப்பினி பெண் ஒருவர் கொடூரமாக சிதைக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். எதிர் தரப்பில் இருந்து வெடி சத்தத்துடன் துப்பாக்கி ஒன்றின் தோட்டா அப்பெண்ணின் தலையில் பாய்கிறது. உடனே டைட்டில் கார்டு போடப்பட்டு Chatper 1 என்ற தலைப்புடன் கதைக்குள் செல்கிறார்கள். கொடூரமாக சிதைப்பட்டு, தலையில் குண்டு பாய்ந்து கோமாவுக்கு சென்ற பெண் , 4 ஆண்டுகள் கழித்து சுயநினைவுக்கு திரும்புகிறார். தன் வயிற்றில் இருந்த குழந்தை கொல்லப்பட்டதாக அறிகிறார். தன் வாழ்க்கையை சிதைத்து குழந்தையை கொன்றவர்களின் பெயரை பேப்பரில் பட்டியல் போட்டு ஒவ்வொருவராக தேடி ரத்தம் தெறிக்க தெறிக்க வெட்டி சாய்க்கும் முயற்சியில் அந்த பெண் வெற்றி பெற்றாரா இல்லையா? இதுதான் குவெண்டின் டாரண்டினோவின் kill bill படத்தின் கதைக்கரு.
கிட்டதட்ட மேலே சொன்ன அனைத்தும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் சாணி காயிதத்திலும் தெளிக்கப்பட்டிருக்கும். மேலும், கொரிய இயக்குநரான Park Chan-wook (பார்க் சான்-வூக்)இன் ‘Lady Vengeance’ திரைப்படத்தின் சாயலும் இருக்கிறது. அதற்காக அப்படங்களின் காப்பி என்று சொல்ல முடியாது. அதன் தாக்கத்தில் இருந்து தான் சாணி காயிதம் உருவாகியிருக்கக்கூடும் என்றே கணிக்கிறோம். சாதி ஆணவத்தால் தன் கணவனையும், குழந்தையையும் கொடூரமாக எரித்து கொலை செய்த கும்பலை, சங்கையனின் (செல்வராகவன்) உதவியுடன் குரூரமாக பழி தீர்க்க கிளம்புகிறாள் பொன்னி (கீர்த்தி சுரேஷ்). கருப்பு வெள்ளையில் சங்கையாவின் Introவுடன் படம் தொடங்க, முதல் காட்சியிலேயே பொன்னியும், சங்கையனும் ஒரு பெண்ணை கட்டிவைத்து கொடூரமாக எரித்து கொலை செய்கிறார்கள். இதன்பிறகு டாரண்டினோ பாணியிலேயே முன்னுரை: குலசேகரப்பட்டினம் (Chapter 1 என்பது போல) என தலைப்பு போட்டுவிட்டு கதைக்குள் செல்கிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
படத்தின் திரைக்கதை நேர்க்கோட்டில் இல்லாமல் NON linear முறையில் சொல்லப்படுவதால் ஆடியன்ஸுக்கு குழப்பம் இல்லாமல் எளிதாக புரியும் வகையில் படத்தை chapter-களாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு chapter-க்கும் ஒரு பெயர் வைப்பது டாரிண்டினோவின் ஸ்டைல். அதே பாணியை தான் சாணி காயிதத்திலும் கையாண்டிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். படத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தலைப்போடு தொடங்குகிறது. படம் முழுக்க டன் டன்னாக ரத்தம் தெறித்தாலும் ஒரு சில காட்சிகளைத் தவிர அந்த Emotion நமக்கு சரியாக கடத்தப்படவில்லை. ‘கத்தியெடுத்தவங்க எல்லாம் சூனாபானா ஆகிட முடியுமா?’ என்பது போல் ரத்தம் தெறித்தாலே டாரண்டினோ படமாயிடுமா என்றே யோசிக்க வைக்கிறது.
முதல் காட்சியிலேயே ஒரு பெண்ணை கட்டிவைத்து உடலில் கத்தியால் குத்துவார்கள். கோரமான அந்த காட்சியில் கூட சீரியலில் வரும் பெண் கதாப்பாத்திரங்களை போல் ’ஆஆஆ’ என கத்தி மிகவும் தட்டையாக ரியாக்ட் செய்கிறது அந்த கதாப்பாத்திரம். இதுபோன்று ராவான படங்களை எடுக்கும் போது, character-களின் Geographical Establishment (கதாப்பாத்திரங்களின் இருப்பிட அமைப்பு) மிகவும் முக்கியம். கடலோர கிராமங்களாக இப்படத்தில் காட்டப்படும் இடங்களை எல்லாம் எந்த கிரகத்தில் இருந்து கண்டுபிடித்தார்கள் என்றே தெரியவில்லை. Western படங்களை போன்ற Wide shot-களை காட்டுவதற்காக கடற்கரையில் தன்னந்தனியாக ஒரு வீட்டை அமைத்தது போல் இருந்தது. Black and White இல் பார்க்கும் போது அது கடற்கரையா அல்லது பாலை வனமா என்றுகூட சந்தேகம் ஏற்படுகிறது.
இன்னொரு பெரிய பிரச்சனை கதாப்பாத்திங்களின் ‘ஸ்லாங்’. சங்கையனும், பொன்னியும் பேசும் ‘ஸ்லாங்’ தமிழகத்தின் எந்த கடற்கரை மற்றும் மீனவ பகுதிகளுக்கும் ஒத்துப்போகாத வகையில் அமைந்துள்ளது. தன் சுற்றத்தார்கள் எரிக்கப்படும் போது தன் இயலாமையை வெளிப்படுத்தும் தருணத்தில், நடிப்பில் பின்னி எடுக்கிறார் செல்வராகவன். ஆனால், அவர் பேசும் ‘ஸ்லாங்’ ஆனாது பற்றியெறியும் அவரின் நடிப்பில் அப்படியே தண்ணீர் ஊற்றி அணைத்துவிடுகிறது. ‘தொப்பாரு! வாழ்க்கைல யாரு First வராங்கன்னு முக்கியமில்ல’ என மன்மதனில் சிம்பு பல்லைக்கடித்துக் கொண்டு பேசுவது போலவே சங்கையனின் ஸ்லாங் வெளிப்படுகிறது. இதே பிரச்சனை தான் பொன்னிக்கும்.மன்மதனில் சிம்புகூட தன்னுடைய தம்பியின் உயிரிழப்பை பார்க்கும் போது தன்னுடைய பேச்சு வழக்கில் தான் கத்தி கதறுவார். ஆனால் குடும்பத்தையே இழந்த கீர்த்தி சுரேஷோ, ‘பழிவாங்குறதுன்னா என்னன்னு தெரியுமா!’ என தவளையை வெட்டி பாடும் எடுக்கும் biology வாத்தியார் போல நேர்த்தியாக பேசுகிறார். ஆனால் இதுபோன்ற கதாப்பாத்திரங்களுக்கு Imperfection is perfection!
இதுபோக படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைவரும் ஒரே சாயத்தில் முக்கியெடுத்த ‘யூனிபார்ம்’ போல் ஒரே மாதிரியாக உள்ளனர். அதுவும் வில்லன் கேங்கில் வரும் ஒருவர் நடை உடை பாவனையில் செல்வராகவனின் சங்கையன் கதாப்பாத்திரத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல் இருக்கிறார். வில்லன் கேங்கின் கதாப்பாதிர வடிவமைப்பு வலிமையற்றதாக இருக்கிறது. வீட்டை கொளுத்துவிட்டு செல்பவர்கள், தங்களை கொல்ல வரும் சங்கையன் – பொன்னிக்கு பெரிதாக எந்த கஷ்டத்தையும் கொடுப்பதில்லை. தளபதியில் வரும் ரஜினி மம்மூட்டியிடம், ‘இந்தா என் உயிர் எடுத்துக்கோ’ என சொல்வது போல் தங்களை குத்தவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அதனால் தான் அவர்களை கொத்து பரோட்டா போடப்படும் போதும் அவர்களின் வலியை நம்மால் உணரவே முடியவில்லை. அணு அணுவாக சித்திரவதை செய்யப்பட்டு, சிதைக்கப்படும் போது கருணைக்காக ஏங்குவது மனித இயல்பு. அவனுக்கு கருணை காட்டப்படலாம் அல்லது கருணை மறுப்பட்டு அவனின் வலியும் வேதனையும் ரசிக்கப்படலாம். இதில் ஏதோவொன்று நடக்கும் போது தான் ஆடியன்ஸை அது Emotionaly ஒரு உலுக்கு உலுக்கும். (kill bill கிளைமாக்ஸில் டாரண்டினோ இதில் தன் வித்தையை காட்டியிருப்பார்) அந்த மேஜிக் இந்த சங்கையன் மற்றும் பொன்னியின் பழிவாங்கலில் நிகழவேயில்லை!
தன்னுடைய படங்கள் விருதுகளை வாரிக்குவிக்கும் போதே ‘டாரண்டினோ’ தவறாமல் ஒன்றை குறிப்பிடுவார். ‘என்னுடைய படங்களின் வெற்றிக்கும் தனித்துவத்திற்கும் காரணமாக இருப்பது நான் உருவாக்கிய கேரக்டர்களும், அதில் நடித்த நடிகர்களுமே தான்’. இன்னும் நூறாண்டுகள் கழித்தும் என் படங்கள் கொண்டாடப்படுமேயானால் அது
நான் உருவாக்கும் கேராக்டர்களால் மட்டுமே நடக்கும்’ என்பதே. தன் படங்களில் ஒரே காட்சியில் வரும் Bar tender-ஐ கூட ஒரு தனித்துவமான சுவாரஸிமான மனிதராக உருவாக்கி உலா விடுவது தான் டாரண்டாடினோவின் ‘ஸ்டைல்’. ஆக, டாரண்டினோபோல் படமெடுக்க விழையும் இயக்குநர்கள் வண்டி வண்டியாக Blood pocket-ஐ வாங்குவதற்கு முன்பு இவற்றில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சினிமா வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
அதற்காக படம் பார்க்க முடியாத அளவு ‘மொக்கை’ என்பது நம் விமர்சனம் அல்ல!. ஒட்டுமொத்தமாக இந்த படம் ஒரு நல்ல அட்டம்ட் தான். ஆக்ஷன், கிரைம், ரிவென்ஜ் ஜானர் படங்களின் ரசிகர்கள் தாராளமாக பார்க்கலாம். படத்தின் கேமிரா பெண் யாமினி யக்னமூர்த்தி ஒவ்வொரு frame-லும் மிரட்டுகிறார். கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகளின் தன்மைக்கேற்ப காட்சிகளை செதுக்கியிருக்கிறார். சாம் சி.எஸ்-இன் இசை படத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி மேலே நாம் குறிப்பிட்டவைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இயக்குநர் நினைத்து போல் ஒரு தராமான ‘டாரண்டினோ ஸ்டைல்’ படமாக சாணி காயிதம் வந்திருக்கலாம் என்பதே நம் கருத்து.
- வேல் பிரசாந்த்