சேடப்பட்டி முத்தையா மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்…

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், சேடப்பட்டி முத்தையா மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996-ம் ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், கட்சியில் தம்மை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி முத்தையா, அப்போது முதல், திமுக-வின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார்.

அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.