நியூசிலாந்து வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி, தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதற்கிடையே, பெர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 388 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டிவோன் கான்வே 80 ரன்களும் வில் யங் 82 ரன்களும் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 80 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும் மார்க் வுட், அலி ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளும் டேன் லாரன்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் டாம் சிம்லி 8 ரன்னிலும் ஜாக் கிராவ்லி 17 ரன்னிலும் ஹென்றியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். போப், டேன் லாரன்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வாக்னர் சாய்த்தார். ஜேம்ஸ் பிராக்ஸி விக்கெட்டை படேல் வீழ்த்த, அந்த அணி, 23 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பு 71 ரன்களுடன் ஆடி வருகிறது.
கேப்டன் ஜோ ரூட்டும் மார்க் வுட்டும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாள் ஆட்டம் பாக்கி உள்ள நிலையில், நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பிருக்கிறது.