நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் புதிய கட்டடத்தில் நாளை பிற்பகல் இரு அவைகளும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதை “சிறப்பு அமர்வு” என்று விவரித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், தற்போதைய மக்களவையின் 13-வது அமர்வு என்றும், மாநிலங்களவையின் 261வது அமர்வு என்றும் அரசு பின்னர் தெளிவுபடுத்தியது.
நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதிய கட்டடத்தில் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கடந்த மே 28 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது. ஆனாலும் புதிய நாடாளுமன்றத்தில் முறைப்படி கூட்டத்தொடர் தொடங்கப்படவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசிய சின்னம், பாரம்பர்ய சடங்குகள், சர்வமத பிரார்த்தனைகள், செங்கோல் வைப்பு போன்ற பிரமாண்டங்கள் நடைபெற்றாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிலையில் மக்களவை அலுவல்கள் நாளை பிற்பகல் 1.15 மணிக்கு புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் எனவும், மாநிலங்களவை அலுவல்கள் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்றைய அமர்வு நடந்து முடிந்த நிலையில், நாளை முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.







