கொண்டித் தோப்பில் உள்ள சாமுண்டா கிப்ட் சென்டரில் ஏற்பட்ட தீவிபத்தினை இரண்டாவது நாளாகத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.
சென்னையை அடுத்தக் கொண்டித்தோப்புப் பகுதியில் உள்ள சாமுண்டா கிப்ட் சென்டர் என்ற கடையில் மின் கசிவுக் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் இரண்டாவது நாளாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கீம் சிங்(வயது 42) பாரிமுனையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் சாமுண்டா கிப்ட் சென்டர் என்றக் கடையை நடத்தி வருகிறார். இவர் சுமார் இரண்டு தளங்களில் பொருட்களை வைத்து ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பணிகளையும் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் புதன் கிழமை இரவு பணியை முடித்துவிட்டு பணியாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் எதிர்பாராத விதமாக மின் கசிவினால் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கடையில் இருந்த பொருட்களில் தீ பற்றி எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.
நிலையில் விரைந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரமாகத் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொழுந்து விட்டு எறிந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் குடோன் முழுவதும் விட்டுவிட்டு தீ ஏற்பட்டதால் மீதம் இருந்த பரிசுப் பொருட்களும் எரிந்து சேதமடைந்தது. இதில், தீயணைப்பு துறையினர் ஹரி என்பவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு எட்டு தையல் போடப்பட்டது. மேலும, தீ விபத்து ஏற்பட்டக் கடையில் 5 லட்சத்திற்கும் மேலானப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
– கே.ரூபி







