ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, டென்மார்க்கில் இந்திய வம்சாவழியினரை சந்தித்ததோடு அவர்களுடன் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
கோபன்ஹெகன் நகரில், பிரதமர் நரேந்திரமோடியை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வரவேற்றார். தொடர்ந்து டென்மார்க் பிரதமரின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, தனது பெரிய பங்களா மற்றும் பண்ணையை சுற்றிக்காட்டினார். தாம் இந்தியா வந்தபோது தமக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ஓவியத்தை அறையில் மாட்டியிருப்பதையும் அவர் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் ஆகியோரின் முன்னிலையில் இருநாட்டு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பசுமை ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவற்றில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் டென்மார்க் அரசி மார்கிரேத்தை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, அரசி மார்கிரேத் விருந்தளித்து உபசரித்தார்.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்’
தனது நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக டென்மார்க்கில் வாழும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மொழிகள் எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்திய கலாச்சாரத்தை கொண்டுள்ளோம் எனவும் இந்தியாவின் சக்தி அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த உலகத்தின் சக்தியும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். முன்னதாக இந்திய வம்சாவளியினர் சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்களுடன் பிரதமர் மோடி டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








